சென்னை: திமுக அழிய வேண்டும் என நினைக்கின்றனர் - முதல்வர் ஸ்டாலின்
திமுக வளர்வது சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான், புதிது புதிதாக கட்சித் தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும், ஒழிய வேண்டும் என்று கூறுகின்றனர் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை, கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் இன்று (நவ.4) தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், அனிதா அகாடமி மூலம் பயின்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கலைஞர் இலவச கண் மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்றவர்களுக்கு மூக்கு கண்ணாடிகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், யார் யாரோ, வருகிறவர்கள் எல்லாம் புதிது புதிதாக கட்சித் தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும், ஒழிய வேண்டும், என்று கூறும் நிலையில்தான் வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் நான் பணிவோடு கேட்டுக் கொள்வது, நான்கு ஆண்டுகளைத் தொடக்கூடிய நிலையில் இந்த ஆட்சி செய்திருக்கக்கூடிய சாதனைகளை எண்ணிப் பார்க்க வேண்டும். அண்ணா கூறுவதுபோல் ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், வாழ்க வசவாளர்கள்! அதைத்தான் நானும் சொல்ல விரும்புகிறேன். எங்களுடைய போக்கு, மக்களுக்கு செய்யக்கூடியதுதான். தேவையில்லாமல் எல்லோருக்கும் நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. தேவையும் இல்லை. எங்களுடைய நேரத்தை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை. மக்களுக்கான பணி செய்வதற்கே எங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.