சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்ரோடு பகுதியில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ரூ. 564 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை, விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம், மீனவர் நலத் துறை சார்பில், சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்ரோடு பகுதியில் 1102. 25 ஏக்கரில் ரூ. 564. 44 கோடியில் கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதன் நிர்வாக கட்டிடம், நுழைவுவாயில் வளைவுகள், விருந்தினர் விடுதி மற்றும் 9 வளாகங்கள், அதை சார்ந்த 126 கட்டிடங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் நேற்று திறந்து வைத்தார்.
இந்த ஆராய்ச்சி நிலையம் மூலம் ஆண்டுதோறும் சுமார் 70 உயர்தர நாட்டின பசுக்கள், 500-க்கும் மேற்பட்ட மேம்படுத்தப்பட்ட செம்மறி ஆடு மற்றும் வெள்ளாட்டு குட்டிகள், 500 வெண்பன்றி குட்டிகள், 20 லட்சம் நாட்டுக்கோழி குஞ்சுகள் மற்றும் 20 லட்சம் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் குறைந்த செலவில் தரமான பால், முட்டை, இறைச்சி பொருட்களை உற்பத்தி செய்ய இயலும் என கூறப்பட்டுள்ளது.