மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மூலம் மக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
பொது மக்களுக்கான அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்றுசேரும் வகையில் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் முதல்வர் ஸ்டாலினின் நேரடி கண்காணிப்பில் முதல்வரின் முகவரித் துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊரகப்பகுதிகளில் 2, 341 முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டு, தற்போது வரை 861 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 15 துறைகள் சார்ந்த கோரிக்கைகள் சிறப்பு முகாம்கள் மூலம் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்று தலைமை செயலகத்தில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆய்வுகூட்டம் நடத்தினார். அப்போது காணொலி மூலமாக நாகப்பட்டினம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, மதுரை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடி, முகாம் ஏற்பாடுகள் குறித்தும், பெறப்பட்ட மனுக்களின் விவரங்கள் மற்றும் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் குறித்தும் பயனாளிகளிடமும் கேட்டறிந்தார்.