
சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்க அனுமதிப்பதா?: வைகோ கண்டனம்
மாநில அரசின் அனுமதி பெறாமல் சிபிஎஸ்இ பள்ளிகளைத் தொடங்க அனுமதிப்பதா? என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நாடு முழுவதும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் தனியார் பள்ளிகள் தொடங்க அந்தந்த மாநிலத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறப்பட வேண்டும். குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த சான்றிதழ் மாநில அரசிடம் இருந்து பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், விதிமுறைகளில் திருத்தம் செய்து, ஒரு அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் 2026-27 கல்வி ஆண்டு முதல் மாநிலங்களில் சிபிஎஸ்இ பள்ளி தொடங்க வேண்டும் என்றால், அதற்கான தடையில்லா சான்றிதழ் மாநில அரசிடம் இருந்து பெற வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையையும், மும்மொழி திட்டத்தையும் தமிழ்நாடு கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்குவதற்கு மாநில அரசின் அனுமதியே தேவையில்லை என்று விதிகளை திருத்துவது ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பிற்கான இன்னொரு செயல் திட்டம் தான் என்பதில் ஐயமில்லை. எனவே மாநில அரசின் அனுமதி பெறாமல் சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்க முயற்சிப்பதை முறியடிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.