கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழப்பு 73 ஆக அதிகரித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர். என். ரவி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர். என். ரவி: “கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள மேப்பாடி அருகே மிகப்பெரிய நிலச்சரிவுகளில் விலைமதிப்பற்ற உயிர்கள் பரிதாபகரமாக இழந்தது ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காணாமல் போனவர்கள் பாதுகாப்பாக கிடைக்கவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டிக் கொள்கிறேன், ” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி: “நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக செய்திகள் வரும் நிலையில், அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டுமென கேரள அரசையும், மீட்புப் பணிகளில் கேரள மாநில அரசுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்துக்கொடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன். நம் அண்டை மாநில சகோதரர்களுக்கு இத்தகு துயர்மிகு நேரத்தில் உறுதுணையாக இருக்குமாறு திமுக அரசை கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.