அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே விக்ரமங்கலம் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் +1 மற்றும் +2 வகுப்பில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் அம் மாணவர்கள் இருதரப்பினர்களுக்கிடையே சாதி ரீதியான பிரச்சனை ஏற்பட்டு அடிக்கடி இருதரப்பு மாணவர்களும் மோதல் சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இருதரப்பு மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் போலீசில் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து உரிய நடவடிக்கை யாரும் எடுக்காத நிலையில் இன்று அதே இரு தரப்பு மாணவர்கள் மத்தியில் மோதல் ஏற்பட்டு அடிதடியில் ஈடுபட்டிருக்கின்றனர். இதில் ஒரு சில மாணவர்கள் லேசான காயமடைந்தும் இருக்கின்றனர். இதில் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து விக்கிரமங்கலம் காவல் நிலையம் முன்பாக கிராமத்தில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர்.