விருதுநகரில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்த வாலிபரை பொதுமக்கள் விரட்டி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விருதுநகர் அருகே உள்ள டி. காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் ஆண்டாள் வயது 30. இவர் தென்காசி நகராட்சியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இன்று காலை அவரது ஊரிலிருந்து சங்கரலிங்கபுரம் பேருந்தில் ஏறி விருதுநகர் மீனாம்பிகை பங்களா அருகே இறங்கினார். அருகில் உள்ள தெரு வழியாக அங்கிருந்து ரயில் நிலையம் நோக்கி நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த வாலிபர் ஒருவர் அவரது கழுத்தில் இருந்த 4 சவரன் செயினை பறித்துக் கொண்டு ஓடினார். உடன் ஆண்டாள் கூச்சலிட்டார். இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய வாலிபரை விரட்டி பிடித்தனர். பின்னர் அவரை விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர் விருதுநகர் அருகே கோவில் புலிக்குத்தியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (23) என்பதும் முதன்முறையாக திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து
அவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.