விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை விருதுநகர் சாலையில் உள்ள தமிழ்மணி திரையரங்கில் அமரன் திரைப்படம் வெளியாகி ஓடிக் கொண்டுள்ளது. இந்நிலையில் அமரன் திரைப்படம் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைக்கும் வகையில் உள்ளதாகவும் நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் இருப்பதாகவும் கூறி அமரன் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர் தமிழ்மணி திரையரங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகரத் தலைவர் ஜின்னா தலைமையில் மாவட்ட செயலாளர் அலி அகமது முன்னிலையில்
நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் அப்துல் வகாப் சிறப்புரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அமரன் திரைப்படத்தை கண்டித்தும் அமரன் திரைப்படத்தை பார்த்து பாராட்டிய தமிழக முதலமைச்சரை கண்டித்தும், ராஜ்கமல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்களைக் கண்டித்தும் எஸ்பிபிஐ கட்சியினர் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். அதனைத் தொடர்ந்து திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் தமிழ்மணி திரையரங்கை எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திரையரங்கை முற்றுகையிட முயன்ற எஸ்டிபிஐ கட்சியினரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.