ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தினால் நோயாளிகள் அவதி. ,
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் வராததால் புற நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். நேற்று சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜியை விக்னேஷ் என்பவர் கத்தியால் குத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை, அச்சத்தில் உள்ளதாகவும் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பொது மருத்துவம், எலும்பு முறிவு, குழந்தைகளுக்கு சிகிச்சை, இருதய சிகிச்சை, சித்தா மருத்துவம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வேலை புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மேலும் பள்ளி குழந்தைகள், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையும் பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணி பெண்களும் சிகிச்சை பெற முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர். அவசர சிகிச்சை பிரிவு மட்டும் இயங்கி வருகிறது. தினந்தோறும் மருத்துவமனைக்கு ஆயிரகணக்கான புற நோயாளிகள் வந்து செல்லும் நிலையில் இன்று மருத்துவர்கள் போராட்டத்தினால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி தனியார் மருத்துவமனையை நாடி செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.