சிவகாசியில் கிடப்பில் போடப்பட்ட சாலை பணிகள் மீண்டும் தொடக்கம்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் சாலை அமைக்க தோண்டி போட்டு ஒரு மாதங்களுக்கு மேலாகியும் பணிகள் தொடங்காத நிலையில் மீண்டும் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். சிவகாசி இரட்டை பாலம் விலக்கிலிருந்து விளாம்பட்டி விலக்கு வரை செல்லும் சாலை அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. சாலை அமைத்த சில ஆண்டுகளிலேயே பல இடங்களில் சேதமடைந்தன.
அவ்வப்போது சாலையில் பல இடங்களில் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறுவதால் சாலையில் பல இடங்களில் சிதைந்து காணப்படுகிறது. இந்த சாலை மோசமான நிலையில் போக்குவரத்து லாயக்கற்ற நிலையில் குண்டும் குழியுமாக காணப்பட்டது. இது குறித்து சம்பந்தபட்ட சாலையை ஆய்வு செய்த சிவகாசி எம். எல். ஏ. அசோகன் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி முதல்-அமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடி நிதி பெற்றுள்ளார்.
இந்த நிதியை கொண்டு அந்த பகுதியில் உள்ள சுமார் 1. 4 கிலோ மீட்டர் தூர சாலையை புதுப்பிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அதனை தொடர்ந்து சாலையை சீர் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்றது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.