சாத்துார் அருகே உள்ள வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3-ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் ஆன மணி, காதணி மற்றும் சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டம்,
சாத்துார் அருகே வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நுண் கற்காலத்தை அறியும் வகையில் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ம் கட்ட அகழாய்வு பணி கடந்த ஜூன் 18-ம் தேதி தொடங்கியது. இதுவரை, கண்ணாடி மணிகள் கல்மணிகள், சூது பவள கல் மணிகள், முழுமையான சங்கு வளையல், பழங்கால சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப்பகுதி, கி. பி 16-ம் நூற்றாண்டு நாயக்கர் கால செப்புக் காசு, அணிகலன்கள், திமிலுடன் கூடிய காளை உருவ பொம்மை உள்ளிட்ட 1, 800க்கும் மேற்பட்ட பொருள்கள் அகழாய்வில் கிடைத்துள்ளன.
இந்நிலையில் சுடுமண்ணால் ஆன மணி, காதணி, சங்கு வளையல் உள்ளிட்டவைகள் கண்டெடுக்கப்ட்டுள்ளது. இதன் மூலம் முன்னோர்கள் அலங்கரிக்கப்பட்ட அணிகலன்களை கைகளால் தயாரித்து அணிந்துள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும், வெம்பக்கோட்டையில் நடைபெற்றுவரும் 3-ம் கட்ட அகழாய்வில் இதுவரை 2, 395 பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.