விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ அழகிய நல்லூர் கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் சுமார் 25 சென்ட் அரசு நிலம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த இடத்தை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளதாகவும், அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் கூறி கீழ அழகிய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அப்போது கோட்டாட்சியர் இல்லை என்பதால் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் ரமணனிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட ரமணன் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.
மேலும் கீழ அழகிய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் பெறுவதற்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் நடந்து சென்று மேல அழகிய நல்லூர் சென்று வாங்க வேண்டி இருப்பதாகவும், இதனால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்றி அங்கு தங்களுக்கு புதிய ரேஷன் கடை கட்டி தர வேண்டும் என கீழ அழகிய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.