தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெ. ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரம் மகராஜபுரம், வழுதரெட்டி, மந்தக்கரை, வண்டிமேடு ஆகிய இடங்களில் நடைபெற்றது. நிகழ்ச்சிகளில், கட்சியின் மாவட்டச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் பங்கேற்று ஏழை, எளியோருக்கு தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினார். முன்னதாக, நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு, பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்வு, அரசு அலுவலகங்களில் லஞ்சம், அரசின் வளர்ச்சித் திட்டங்களில் முறைகேடு போன்றவற்றை திமுக அரசு தடுக்க வேண்டும் என்றார் அவர். மகராஜபுரம், வழுதரெட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அதிமுக நகரச் செயலர்(விழுப்புரம் தெற்கு) இரா. பசுபதி, மந்தக்கரை ஆகியோரும், வண்டிமேடு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஜி.கே. ராமதாசும் தலைமை வகித்தனர்.