மாவட்ட ஆட்சியா் சி. பழனி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தேசிய விலங்கின நோய்களைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் கால்நடைகளுக்கான கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் ஜூன் 10ம் தேதி தொடங்குகிறது. விழுப்புரம் கோட்டத்தில் 2. 35 லட்சம் கால்நடைகளுக்கும், திண்டிவனம் கோட்டத்தில் 2, 43, 500 கால்நடைகளுக்கும் என மொத்தமாக 4, 78, 500 கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தும் முகாம் கால்நடைப் பராமரிப்புதுறை மூலம் நடத்தப்படும். இந்த முகாம் ஜூலை 10ம் தேதி வரை நடைபெறும். கால்நடை பராமரிப்புத் துறையிலுள்ள 97 தடுப்பூசி செலுத்தும் குழுக்கள் மூலம் மாவட்டத்திலுள்ள 13 ஒன்றியங்களிலும் இந்தப் பணி மேற்கொள்ளப்படும். இதன் மூலம் மாவட்டத்தில் 100 சதவீத இலக்கு அடைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் கால்நடைகளை வளா்க்கும் விவசாயிகள், தங்கள் கால்நடைகளுக்கு கட்டாயம் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். சினையுற்ற கால்நடைகள், பால் கறக்கும் பசு மற்றும் எருமை இனங்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதால், பால் உற்பத்தியில் பாதிப்பு ஏதும் ஏற்படாது. எனவே, தங்கள் பகுதியில் கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் நடைபெறும் நாள்களில் விவசாயிகள் கால்நடைகளை அழைத்துச் சென்று தடுப்பூசியை செலுத்தி, மாவட்டம் நூறு சதவீத இலக்கை அடைய முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.