விபத்து இழப்பீடு வழங்காத அரசு பஸ் 'ஜப்தி'

58பார்த்தது
விபத்து இழப்பீடு வழங்காத அரசு பஸ் 'ஜப்தி'
விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தை சேர்ந்தவர் ராமானுஜம், 55; கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2015ம் ஆண்டு மே 19ம் தேதி கோலியனுார் கூட்ரோட்டில் நடந்து சென்றபோது, பின்னால் வந்த கும்பகோணம் கோட்ட அரசு பஸ் மோதியது. அதில் ராமானுஜம் படுகாயமடைந்தார். வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

இந்நிலையில் ராமானு ஜம் இழப்பீடு கோரி அதே ஆண்டு ஜூலை 2ம் தேதி விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் 2ல் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில், விபத்து ஏற்படுத்திய கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் ராமானுஜத்திற்கு இழப்பீடாக ரூ. 37 ஆயிரத்து 950 வழங்க நீதிபதி பிரபா தாமஸ் உத்தரவிட்டார்.

ஆனால், கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்காததால், ராமானுஜம் கடந்த ஜூலை 24ம் தேதி, நிறைவேற்று மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி பிரபா தாமஸ், விபத்து இழப்பீடு தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ. 59 ஆயிரத்து 561 வழங்காத கும்பகோணம் கோட்ட அரசு பஸ்சை ஜப்தி செய்ய கடந்த 25ம் தேதி உத்தரவிட்டார்.

அதனையொட்டி நேற்று காலை 11: 00 மணிக்கு விழுப்புரம் பஸ் நிலையத்தில் இருந்து கும்பகோணத்திற்கு புறப்பட்ட அரசு பஸ்சை அமீனாக்கள் ராஜி, தரணி ஆகியோர் வழக்கறிஞர் வேலவன் முன்னிலையில் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி