ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் நேற்று (23. 08. 2024) இரவு வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை செல்வதற்காக சென்னை செல்லும் பேருந்தில் அமர்ந்திருந்ததாகவும் அப்போது அருகே இருந்த நபர் மணிகண்டனின் செல்போனை திருடிக்கொண்டு ஓடியதாகவும் கூறப்படுகிறது.
இதனை அறிந்த பொதுமக்கள் மற்றும் பயணிகள் அந்த நபரை விரட்டிச் சென்று பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்த வேலூர் வடக்கு காவல் நிலைய புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாக்குதலுக்குள்ளான நபர் கூறுகையில், மணிகண்டனின் செல்போன் கீழே விழுந்ததாகவும், அதனை நான் எடுத்து கொடுத்த போது மக்கள் என்னை தாக்கியதாகவும் கூறினார். நள்ளிரவில் பேருந்து நிலையத்தில் நபர் ஒருவரை பொதுமக்கள் விரட்டிச் சென்று பிடித்து தாக்கிய சம்பவம் பேருந்து நிலையத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.