திருப்பத்தூரில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் அருகில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கம் சார்பாக 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில பொது செயலாளர் சுவாமிநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொது வினியோகத் திட்டத்துக்கு தமிழக முதல்வர் அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி தனித்துறை ஏற்படுத்த வேண்டும். ரேஷன் கடைகளில் விற்பனை முனையம் கருவியுடன் மின்னணு தராசு புளூடூத் முறையில் இணைப்பதற்கு முன்பாக கிடங்குகளில் உள்ள மின்னணு தராசுடன் கிடங்கின் கணினியில் புளூடூத் முறையில் இணைக்கப்பட்டு லாரிகளில் ஏற்றப்படும் பொருட்கள் அனைத்தும் 50 கிலோ முதல் 650 கிலோ கிராம் எடையிட்டு ரசீது வழங்கப்பட வேண்டும்.
விற்பனையாளரிடம் ஏற்றும் கூலி மற்றும் இறக்கும் கூலி கட்டாயம் வசூல் செய்வதை தவிர்க்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள காலிப்பணியிடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலமாக நியமனம் செய்வதற்கு முன்பாக ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்களுக்கு முன்னுரிமை அளித்து எழுத்தர் பணியிடம் நிரப்ப வேண்டும். உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.