அரக்கோணம் அடுத்த அம்பரிஷிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அருந்ததி பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் எனக் கூறி பொதுமக்கள் சிலர் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
அவர்களை ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பொதுமக்களில் சிலர், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவனை நேரில் சந்தித்து டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கூறி கோரிக்கை மனுவை வழங்கினர்.