ஆரம்ப சுகாதார நிலையங்களில் ORS கரைசல் வினியோகம்

1930பார்த்தது
ஆரம்ப சுகாதார நிலையங்களில் ORS கரைசல் வினியோகம்
தமிழகத்தில் ஏப்ரல் மாத தொடக்கம் முதல் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் எனவும், அதிகளவில் தண்ணீர் அருந்தும்படியும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

தற்போது தமிழகத்தில் கோடை வெயில் இயல்பை விட 2 முதல் 5 டிகிரி வரை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் பொதுமக்களின் உடலின் நீர் சமநிலையை மேம்படுத்த மாவட்டம் தோறும் பல்வேறு பகுதிகளில் ஓ. ஆர். எஸ். கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப, நகர்ப்புற சுகாதார நிலையங்களில் ஓ. ஆர். எஸ். கரைசல் வினியோகம் செய்யப்பட்டது. வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள அரசு நகர்ப்புற சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக வந்த பொதுமக்கள் வரிசையில் நின்று ஓ. ஆர். எஸ். கரைசலை வாங்கி சென்றனர். பொதுமக்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை பெற்று ஒருவருக்கு ஒரு பாக்கெட் ஓ. ஆர். எஸ். கரைசல் மட்டும் வழங்கப்பட்டது. இந்த கரைசல் வருகிற ஜூன் 30-ந் தேதி வரை வழங்கப்பட உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி