வாணியம்பாடி: சாலையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டிய நபர்

82பார்த்தது
வாணியம்பாடி அருகே பொது வழியை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து சுற்றுசுவர் எழுப்பியதை அகற்ற தரக்கோரி கிராம மக்கள் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வள்ளிபட்டு கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 800 அடி நீளமுள்ள பொது வழியை அப்பகுதி மக்கள் சுமார் 80 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அந்த வழிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் சிமெண்ட் சாலை அமைத்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த வழியை தனி நபர் ஒருவர் சுப்ரமணி என்பவரின் பெயரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பட்டா பெற்றதாக கூறப்படுகிறது. அவர் அந்த வழியை யாரும் பயன்படுத்த கூடாது என்று கூறி சாலையின் குறுக்கே சுற்றுசுவர் எழுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு அவரிடம் சென்று கேட்டபோது அது என் பெயரில் பட்டா உள்ளது. வழியை விடமுடியாது என்று மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் சுமார் 100 குடும்பகளை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று கூடி சாலையின் நடுவே கட்டப்பட்ட சுவரை அகற்றக் கோரி வருவாய் கோட்டாட்சியர் அஜிதா பேகத்திடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

தொடர்புடைய செய்தி