ஆற்காடு: வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு
ஆற்காடு அடுத்த ரத்தினகிரியை அடுத்த உடைக்கப்பட்டிருந் அரப்பாக்கம் முத்தமிழ் நகர் விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால்(வயது 35). இவரது தாய் ரமணி (65). இவர்கள் இருவரும் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். ரமணியின் மகள் ரேணுகா அதேப்பகுதியில் வசித்து வருகிறார். வேணுகோபாலின் அண்ணன் யுவராஜ் ராணுவத்தில் வேலைபார்த்து வருகிறார். இந்தநிலையில் ரமணிக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக நேற்று முன்தினம் (நவம்பர் 13) ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு தனது மகள் ரேணுகா வீட்டில் தங்கியுள்ளார். வேணுகோபாலும் அங்கு தங்கியிருக்கிறார். நேற்று (நவம்பர் 14) காலை வேணுகோபால் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த அவரது அண்ணன் யுவராஜுக்கு சொந்தமான செயின், நெக்லஸ், மோதிரம் உள்ளிட்ட 10 பவுன் நகைகள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து வேணுகோபால் ரத்தினகிரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.