திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சியில் உள்ளது பைரப்பள்ளி. இந்த ஊரை சேர்ந்தவர் விவசாயி கோபிநாதன் (40). இவர் தனது நிலத்தில் நெல், வாழை, நிலக்கடலை என பல்வேறு பயிர்களை பயிரிட்டுள்ளார். இன்று இவரது நிலத்தில் நெல் அறுவடை செய்யும்
வேலை நடைபெற்று வந்தது. இந்த நெல் அறுவடை பணியில் சுமார் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
மதியம் 1 மணி அளவில் நெல் அறுவடையின் போது 9 அடி நீள மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை தொழிலாளர்கள் கண்டு கூச்சலிட்டனர். நிலத்தின் உரிமையாளரான கோபிநாதன் உடனடியாக வனத்துறையினருக்கும் , ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் துணையுடன் , உள்ளூர் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நெற்கழனியில் போக்கு காட்டிய மலைப்பாம்பை சுமார் ஒரு மணி நேரம் போராடி பிடித்தனர்.
பின்னர் அங்கு வந்த வனக்காப்பாளர்கள் ராஜ்குமார், கோகுல் ஆகியோரிடம் பிடிபட்ட அந்த மலைப்பாம்பை ஒப்படைத்தனர். பின்னர் அந்த மலைப்பாம்பு ஆம்பூர் வனசரகம், சாணாங்குப்பம் வனப்பிரிவு , நாய்க்கனேரி காப்பு காட்டில் விடப்பட்டது.