
திருவண்ணாமலை: கொலை வழக்கில் நான்கு பேர் கைது
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், பறையம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 48). இதே பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (75). விவசாயிகளான இருவரது நிலங்களும் அருகருகே உள்ளன. இருவருக்கும் இடையே நீண்ட காலமாக நிலத்தகராறு இருந்து வந்தது. சில தினங்களுக்கு முன்பு இவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பெருமாள், அவரது மகன்கள் மூர்த்தி (45), காசி (43), மூர்த்தி மனைவி மங்கை (43) ஆகியோர் சேர்ந்து மண்வெட்டியால் வெங்கட்ராமனை தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த வெங்கட்ராமனை பொதுமக்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வெங்கட்ராமன் இறந்தார். இதுகுறித்து, தச்சம்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து பெருமாள், மூர்த்தி, காசி, மங்கை ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.