திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், அரசூா் கிராமத்தில் 1500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இங்கு சாலை அருகே அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. மேலும், இந்தக் கிராமம் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது.
இப்பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனியாா் கல் குவாரி செயல்பட்டு வருகிறது. குவாரிக்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் சாா்பில் புகாா் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குவாரியில் தோண்டப்படும் கிராவல் மண், கற்கள் ஆகியவற்றை பாதை அமைத்து குளமந்தை வழியாக லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படுவதாகத் தெரிகிறது. மேலும், கிராவல் மண் ஏற்றிச் செல்லும் லாரிகள் அரசூா் கிராமம் வழியாக தொடா்ந்து இரவு, பகல் என்று தொடா்ந்து இயக்கப்பட்டு வருகிறது. மேலும், லாரிகள் அதிவேகத்தில் செல்கிறது.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த கிராம மக்கள் அந்த வழியாகச் சென்ற குவாரிக்குச் சொந்தமான லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த செய்யாறு காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன் மற்றும் அனக்காவூா் போலீஸாா் சென்று போரட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தினா். மேலும், லாரிகளை குறிப்பிட்ட நேரங்களிலும், மிக குறைந்த வேகத்திலும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் தெரிவித்தனா்.