திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கடந்த 7-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மாவட்டத்தில் 1500-க்கும் மேற்பட்ட சிலைகள் இந்து முன்னணி, பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்தன. திருவண்ணாமலையில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடைப்பெற்றது. திருவண்ணாமலை காந்தி சிலை அருகே ஊர்வலம் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன், நகர துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். டிரோன் கேமராக்கள் மூலம் ஊர்வலம் கண்காணிக்கப்பட்டது. இந்த ஊர்வலத்தில் இந்து முன்னணி சங்கத்தை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கல்லக்கடை மூளை, தண்டராம்பட்டு சாலை வழியாக தாமரை குளம் சென்றது. இந்த ஊர்வலம் செல்லும் போது இளைஞர்கள் பலர் ஆடி, பாடி ஆரவாரம் செய்தனர். மேளதாளம் முழங்க வாகனங்களில் விதவிதமான விநாயகர் சிலைகள் அணிவகுத்து சென்றது. இதை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். பலர் விநாயகர் சிலைகளை வணங்கினர். தங்கள் வீடுகளில் வைத்து வணக்கப்பட்ட சிறிய அளவிலான சிலைகளை ஊர்வலத்தில் சென்ற வாகனத்தில் எடுத்து சென்று கரைத்தனர்.