திருப்பூர் - தாராபுரம் சாலையில் தூய்மைப் பணியாளர்கள் குப்பை அள்ளும் சரக்கு வாகனத்தில் பின்னால் ஆபத்தான முறையில் நின்று பயணம் செய்கின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது,
சரக்கு வாகனத்தில் பின்னால் உட்கார்ந்து பயணம் செய்யாமல் தொட்டியின் விழிம்பில் ஆபத்தான முறையில் நின்று செல்கின்றனர். வாகனம் வேகமாக செல்லும்போது பள்ளத்தில் இறங்கினாலோ, வேகத்தடையில் வேகமாக சென்றாலோ தூய்மைப் பணியாளர்கள் கீழே விழும் நிலை ஏற்படும். மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களே விதிமுறைகளை மீறி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.
இதனை போலீசாரும், போக்குவரத்து அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. தொடர்ந்து இதுபோன்று சரக்கு வாகனத்தில் பின்னால் நின்று சென்றால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சரக்கு வாகனத்தில் பயணம் செய்யும்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏதேனும் ஏற்பட்டால் பயணம் செய்பவர்களுக்கு காப்பீடு உள்ளிட்ட எந்த உதவியும் கிடைக்காது என்பதை யாரும் உணர்வதில்லை. இவ்வாறு தூய்மைப் பணியாளர்களை ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்கள், அதன் டிரைவர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மீதும் போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.