பூட்டியிருந்த பனியன் வேஸ்ட் குடோனில் தீ விபத்து. புகை மண்டலமாக மாறிய குடியிருப்பு பகுதி. பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம்.
திருப்பூர் ஜே பி நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமரவேல். இவர் ஜவஹர் நகர் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக பனியன் துணி கட்டிங் வேஸ்ட் குடோன் வைத்து நடத்தி வருகிறார். குமரவேலும் அவரது மனைவியை மட்டும் குடோனை நடத்தி வந்த நிலையில் இன்று இருவரும் குடோனுக்கு விடுப்பு விட்டு வெளியே சென்றுள்ளனர். இந்நிலையில் பூட்டப்பட்டிருந்த குடோனில் இருந்து புகை வெளியேறியதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக குமரவேலுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சிறிது நேரத்தில் தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. மேலும் குடோனிலிருந்து அதிகபட்சமாக புகை வெளியேற துவங்கிய அந்த பகுதி முழுவதும் புகையால் சூழ்ந்தது. இதனை தொடர்ந்து அச்சமடைந்த அப்பகுதியினர் திருப்பூர் வடக்கு தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினர் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.