திருப்பூர் பேருந்து நிலையத்தில் வெளியேற்றப்படும் தனியார் உணவக கழிவு நீர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் துர்நாற்றத்துடன் கழிவு நீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம்.
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தின் மையக் கட்டிடத்தில் இயங்கும் தனியார் உணவகம் கழிவு நீர் தொட்டி நிரம்பி கழிவு நீர் வெளியேறி பேருந்து நிலையம் முழுவதும் தேங்கி நிற்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் திருப்பூரின் பிரதான பேருந்து நிலையத்தில் துர்நாற்றத்துடன் கழிவு நீர் தேங்கி நிற்கும் நிலையில் அந்த கழிவுநீரின் மீதே நடந்து செல்ல வேண்டிய இக்கட்டான நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் பேருந்து நிலையம் முழுவதும் கடும் துர்நாற்றம் வீசும் நிலையில் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக கழிவு நீரை அகற்றுவதுடன் அலட்சியமாக செயல்படும் தனியார் உணவகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.