அவிநாசிபாளையம் சேமலைகவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கண்டறிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குறவர் இனத்தை சேர்ந்த சிலரை போலீசார் துப்பாக்கியை காட்டி மிரட்டியும் பணம் தருவதாகவும் கூறி குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி சித்திரவதை செய்ததாக 2 நாட்களுக்கு முன்பு 15க்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பத்திரிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்காக அழைக்கும் சந்தேக நபர்களை உரிய மரியாதை உடன் உணவு வழங்கியும் எவ்வித துன்புறுத்தலும் இல்லாமலும் சட்டப்படி விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் இதுவரை சந்தர்ப்ப சாட்சியங்களை சட்டப்படி விசாரணைக்கு அழைத்து விசாரித்து வருவதாகவும், இந்த விசாரணைக்கு வந்த சில சந்தேக நபர்கள் விசாரணையை தவிர்க்கவும் வழக்கை திசை திருப்பவும் பத்திரிகையாளர்களை சந்தித்து உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வருகிறார்கள்.
பொய்யான தகவல்கள் ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் போது அது காவல்துறையின் புலன் விசாரணைக்கும் நீதி பரிபாலனைக்கும் உண்மையான குற்றவாளிகளை கண்டறிவதற்கு இடையூறாக இருக்கிறது. பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று திருப்பூர் மாவட்ட காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.