தாராபுரம் என். என். பேட்டை வீதி பொதுமக்கள் ஆர்டிஒ அலுவலகத்தை முற்றுகையிட்டனர். என். என். பேட்டைவீதி மதுபான கடை எண் 3438 கடையை இடமாற்றம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
பொதுமக்கள் கூறுகையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகிறோம். இங்கு செயல்பட்டு வரும் மதுபான கடை மற்றும் பார் 40 வருடங்களாக இயங்கி வருகிறது. ஜனநடமாட்டம் மிகுந்த பகுதியில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் அதிக அளவில் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் இங்கு வீடுகள் கடைகள் அதிகம் உள்ளது. வீடுகளுக்கும் மற்றும் கடைகளுக்கும் வந்து செல்லும் பெண்கள், குழந்தைகள் மிகவும் பயப்படுகின்றனர். அதேபோல் மதுபான கடைக்கு வரும் மது பிரியர்கள் மது அருந்திவிட்டு பாட்டில்களை அப்படியே போட்டு உடைத்து விடுகின்றனர். மேலும் தகாத வார்த்தைகளை உபயோகித்து வருகின்றனர். மது அருந்திவிட்டு வீடு மற்றும் கடை வாசலில் படுத்துக் கொள்வதும் வாந்தி எடுப்பதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு இ. எஸ். ஐ மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு டாஸ்மாக் கடை உள்ளதால் கடந்த 40 வருடங்களாக பொதுமக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பலமுறை விண்ணப்பம் அளித்தும் இதுவரை எந்த விதமான பலனும் கிடைக்கவில்லை. டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் ஆர். டி. ஒ அலுவலகத்தில் மனு அளித்தனர்.