தாராபுரம் சகுனிபாளையத்தில் வசிப்பவர் நாச்சான்@ நாச்சி இவர்களுக்கு 1992 ஆம் ஆண்டு அரசால் வீட்டுமனை பட்டா கொடுத்து அந்த இடத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டை சேர்ந்தவர்கள் நாச்சி வீட்டில் இல்லாதபோது வழிப் பாதையை அடைத்தபடி தடுப்புச் சுவர் கட்டி பொதுப்பாதையை மறைத்து சுவர் எழுப்பினர். இதனால் நாச்சி மற்றும் அருகில் உள்ள பொதுமக்கள் செல்ல முடியாமல் அவதி அடைந்துள்ளனர். கடந்த மாதம் ஆர்டிஓ அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் பொது வழித்தடத்தை அடைத்து தடுப்புச் சுவர் கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் 30ஆம் தேதி காந்தி சிலை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதை அடுத்து நேற்று பொதுமக்கள் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்து வந்த தாராபுரம் காவல் ஆய்வாளர் விஜயசாரதி உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு ஆர்டிஓ விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக பல்வேறு இடங்களுக்கு சென்று விட்டதாகவும், விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன் பாதை தடுப்பு சுவர் குறித்து பேசி முறையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்ததை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது.