திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

1081பார்த்தது
திருச்சி விமான நிலையம், பன்னாட்டு விமான நிலையத்திற்கு நிகராக தரம் உயர்த்தப்பட்டு சமீபத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிலையில் பெங்களூரு, கொல்கத்தா போன்ற விமான நிலையங்களுக்கு சமீபத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு மின் அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அதில், திருச்சி விமான நிலையம் உள்பட சில விமான நிலையங்களை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் திருச்சி விமான நிலைய வளாகத்தில் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விமான நிலையத்திற்குள் பயணிகள் வந்து செல்லும் பகுதி முழுவதும் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர சரக்கு விமானங்கள் வந்து செல்லும் முனைய பகுதியில் பலத்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருச்சி விமான நிலையம்
முழுவதும் அங்குலம், அங்குலமாக சோதனை செய்யப்பட்டது. கார் நிறுத்தும் இடத்திலும் பலத்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த திடீர் சோதனை விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி