திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் அமைந்துள்ள மதுரை காளியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர் திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் தேர்த்திருவிழா வருகிற 3-ம் தேதி நடைபெற உள்ளது. பிரம்மாண்டமான 30 அடி உயரம் உள்ள இரு தேர்களை பக்தர்கள் தோளிலும், தலையிலும் சுமந்து கொண்டு வீதி உலா வருவது காண்போரை கவரும் விதமாக இருக்கும். இதையடுத்து பக்தர்கள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முன்னதாக பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக திருச்சி மாவட்ட போலீஸ் எஸ். பி செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி கோபால சந்திரன் தலைமையில் முசிறி போலீஸ் டிஎஸ்பி சுரேஷ் குமார் முன்னிலையில் போலீஸ் கொடி அணி வகுப்பு நடைபெற்றது. பேரணியில் 5 இன்ஸ்பெக்டர்கள், 15 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஆயுதப்படை போலீசார், போக்குவரத்து போலீசார் உள்பட சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் தொட்டியம் நகரின் முக்கிய வீதிகளில் பேரணியாக சென்றனர். அப்போது போலீஸ் வாகனங்களும், வஜ்ரா வாகனங்களும் பேரணியின் பின்னே அணி வகுத்து சென்றது. அப்போது தேர்த்திருவிழாவை பாதுகாப்பாகவும், அமைதியாகவும் கொண்டாட வலியுறுத்தப்பட்டது.