திருச்சி மாவட்டம் முசிறி ஐஎம்ஏ திருமண மண்டபத்தில் முசிறி கோட்ட அளவில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பயிற்சி உதவி ஆட்சியர் அமித்குப்தா ஐஏஎஸ் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட வேண்டும். சிலை 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். விநாயகர் சிலைகள் அருகில் அதன் பொறுப்பாளர்கள் 24 மணி நேரமும் இருக்க வேண்டும்.
சிலைகள் அருகில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்கள் வைக்கக்கூடாது. கீத்து மூங்கில் வைத்து பந்தல் போடக்கூடாது. உரிய மின் விளக்கு வசதி செய்யப்பட வேண்டும். விழாவில் பிற மதத்தினர் புண்படும் வகையில் செயல்படக்கூடாது. விநாயகர் சிலை அருகில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு இருக்க வேண்டும். புதிய இடத்தில் சிலைகள் வைக்க கோட்டாட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இக்கூட்டத்தில் புதிய சிலைகள் மற்றும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் வைக்கக்கூடாது என்பதற்கு இந்து முன்னணி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தையின் மூலம் அமைதி காக்கப்பட்டது.