திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே யாகபுரம் ஒத்தக்கடை பகுதியில் மல்லிகை மலை அமைந்துள்ளது. இந்த மலையில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்நிலையில் காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவி கட்டுக்கடங்காமல் கொழுந்து விட்டு எரிந்ததால் பொதுமக்களிடையே பெரும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதையறிந்த துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.