தூத்துக்குடி அருகே மகனுடன் பைக்கில் சென்றபோது பைக் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார். அவரது மகன் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு சிவசுப்பிரமணியபுரம் வேத கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜாசிங் மனைவி கலா பொன்செல்வி (49), இவரது மகன் டேவிட் ஜான்சன் (22), நேற்று கலா பொன்செல்வி தனது மகனுடன் மோட்டார் பைக்கில் நெல்லைக்கு சென்று கொண்டிருந்தார். முறப்பநாடு அருகே வசவப்பபுரம் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த தாய்-மகன் இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கலா பொன்செல்வி பரிதாபமாக இறந்தார். டேவிட் ஜான்சனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து முறப்பநாடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனிதா ராணி வழக்கு பதிவு செய்து, லாரியை ஒட்டி வந்த தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சேர்ந்த பால்பாண்டி (44) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.