கடந்த 27. 12. 2023 அன்று இரவு தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகே புதுக்கோட்டை நெடுஞ்சாலை ரோந்து வாகன காவல்துறையினர் ரோந்து மேற்கொண்டபோது, அங்கே சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம், அதன் முன்பு சென்று கொண்டிருந்த மிதிவண்டியில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இருசக்கர வாகன ஓட்டுநர் மற்றும் மிதிவண்டி ஓட்டுநர் ஆகிய இருவரும் காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்தில் இருந்த மேற்படி புதுக்கோட்டை நெடுஞ்சாலை ரோந்து வாகன சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன் மற்றும் முதல் நிலை காவலர் மகாராஜாகுமார் ஆகிய இருவரும் சேர்ந்து விபத்தில் காயம்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு மனித நேயத்துடன் முதலுதவி அளித்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
மேற்படி நெடுஞ்சாலை ரோந்து வாகன காவல்துறையினரின் இச்செயலை பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களும் ஒளிப்பதிவு செய்து சமூக வலைதளங்களில் பாராட்டியுள்ளனர். மேலும் அவ்வழியாகச் சென்ற பொதுமக்களும் பாராட்டியுள்ளனர்.
மேற்படி விபத்தில் காயம்பட்டவர்களை மனிதநேயத்துடன் உடனடியாக மீட்டு முதலுதவி செய்த சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன் மற்றும் முதல் நிலை காவலர் மகாராஜாகுமார் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் முன்னிலையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ்குமார் வெகுமதி வழங்கி பாராட்டினார்.