எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க சபதம் ஏற்போம் என தூத்துக்குடியில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சித்தசெல்லப்பாண்டியன் பேசினார். தூத்துக்குடியில் அதிமுக மாநில வர்த்தக அணி சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தூவிபுரத்திலுள்ள மாநில வர்த்தக அணி அலுவலகத்தில் நடைபெற்றது.
மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சித்தசெல்லப்பாண்டியன் தலைமை வகித்து பேசுகையில், "அதிமுகவை தொடங்கிய எம்.ஜி.ஆர் காலம் தொட்டு ஜெயலலிதா காலம் வரை இன்று மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற தலைவர்களாக இருந்து வருகிறார்கள். அதன் பின்னர் 3ம் தலைமுறை பொதுச்செயலாளராக எடப்பாடி 4 ஆண்டுகாலம் நல்லாட்சி செய்தார். என்பது நாட்டிற்கே தெரியும். இனி வரும் காலங்களில் இதுபோன்ற அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகளோடு மக்கள் பணியாற்ற வேண்டும். 2026 தேர்தல் எல்லோருக்கும் முக்கியமான காலக்கட்டமாகும். அந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்க அனைவரும் சபதம் ஏற்று களப்பணியாற்ற வேண்டும். உண்மையாக உழைக்கின்ற அனைவருக்கும் எதிர்காலத்தில் நல்ல வாய்ப்பு கிடைக்கும்" என்று பேசினார்.