தூத்துக்குடி கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு அவ்வப்போது மஞ்சள், பீடிஇலைகள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள், பூச்சிக்கொல்லி மருந்து ஆகியவை கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதை தடுப்பதற்காக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய் அனிதா தலைமையிலான காவல்துறையினர் நேற்று தூத்துக்குடி தாளமுத்து நகர் மொட்டை கோபுரம் கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு ஒரு சரக்கு வாகனத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக 22 மூடைகளில் இருந்த பீடிஇலைகள், 8 பண்டல்களில் இருந்த கட்டிங் பீடிஇலைகள் மேலும் 8 மூட்டை பீடிபண்டல்கள் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து பீடிஇலைகள் மற்றும் பீடிபண்டல்களை பறிமுதல் செய்த கியூ பிரிவு காவல்துறையினர் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட பீடிஇலைகளின் மதிப்பு ரூபாய் 50 லட்சம் ஆகும். இந்தக் கடத்தலில் ஈடுபட்டு தப்பி ஓடிய குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.