திருவள்ளூர்: ஊதிய நிலுவை தொகை வழங்க கோரி காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம்

64பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளி கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் கடல்நீரை குடிநீராக சுத்திகரிக்கும் நிலையத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பணி செய்யும் 40 தொழிலாளர்கள் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம் தொடங்கியுள்ளனர். 

கடந்த 25.2.2007 அன்று அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி திறந்து வைத்த இந்த நிலையத்தில் அப்பகுதியில் வசிக்கும் கிராமப்புற இளைஞர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 40 பேர் பணியில் அமர்த்தப்பட்டனர். அதன்படி 15 ஆண்டுகளாக தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் திட்டம் மாற்றப்பட்ட பிறகு அதிலிருந்து பணி செய்யும் தொழிலாளர்களுக்கு எவ்வித சம்பளமும் வழங்கப்படவில்லை. 

இதுகுறித்து தொழிலாளர்கள் சென்னை வாட்டர் டிசாலினேஷன் லிமிடெட் அதிகாரியிடம் கேட்கும்போது இத்தொகையினை சென்னை குடிநீர் வாரியமே உங்களுக்கு அளிக்கும் என கூறியுள்ளனர். இதனால் ஏற்கனவே தமிழக அரசு கவனத்தை ஈர்க்கும் வகையில் தொழிலாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். 

அப்போது சமரசம் பேசிய அதிகாரிகள் விரைவில் இதற்குத் தக்க தீர்வு காணப்படும் என நம்பிக்கை அளித்தனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இதற்காக எடுக்கப்படவில்லை. தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 5 மாத ஊதியத் தொகையையும், 15 ஆண்டுகால நிலுவைத் தொகையையும் வழங்க கோரி இன்று நுழைவுவாயிலில் தொடர் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி