பணிமுதிர்ச்சி அடைந்தவர்களை நியமனம் செய்ய பிஎம்எஸ் தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி தமிழக முதல்வர், வேளாண்மைத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர், நுகர்பொருள் வாணிப கழக அதிகார்களுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தஞ்சாவூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் பிரிவில், நெல் கொள்முதல் பணியாளர்களை பணி நியமனம் செய்யும் போது, பணி முதிர்ச்சி அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தஞ்சாவூர் மண்டலம் கொள்முதல் பிரிவில் பணி புரியும் ஊழியர்கள் தலைமை அலுவலக சுற்றறிக்கைகளை காற்றில் பறக்க விட்டு பணி முதிர்வு இல்லாதவர்களை நியமித்து உள்ளனர். மேலும் இது பற்றி தஞ்சாவூர் மண்டலத்தில் பணி புரியும் முதுநிலை மண்டல மேலாளர், மற்றும் நிர்வாக மேலாளர் ஆகியோரிடம் புகார் கூறியும் பயனில்லை.
நெல் கொள்முதல் பணி நேர்மையாக நடைபெற வேண்டும், விவசாயிகளிடம் கையூட்டு பெறக்கூடாது என்ற முறையில் மண்டல நிர்வாகம் ஆய்வு நடத்த வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் பணி முதிர்வு இல்லாதவர்களை மாற்றி முதிர்ச்சி அடைந்தவர்களை நியமனம் செய்ய வேண்டும். நுகர் பொருள் வாணிப கழகம் முறைகேடுகளை களையாவிட்டால் போராட்டம் நடைபெறும் என்று பிஎம்எஸ் தொழிற்சங்க மாநில பொதுச் செயலர் டி. நாகராஜன் கூறியுள்ளார்.