கும்பகோணம் ரெயில் நிலையத்தில் திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சக்கரவர்த்தி மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் இருப்பு பாதை போலீசார் பயணிகளிடம் விழிப்புணர்வு செய்தனர். தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர். தொடர்ந்து அவர்களின் உடமைகளை போலீசார் சோதனை செய்தனர்.
*பெண்களுக்கு தனி பெட்டி*
அப்போது அவர்கள் கூறியதாவது: - ரெயிலில் பட்டாசு உள்ளிட்ட எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்லகூடாது. விதிகளை மீறி கொண்டு சென்றால் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். பெண்களுக்கு என்று தனியாக ரெயிலில் பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த பெட்டியில் ஏதேனும் ஆண் நபர் ஏறினால் உடனே ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். அறிமுகம் இல்லாதவர்கள் கொடுக்கும் உணவை சாப்பிட வேண்டாம்.
ஜன்னல் அருகே அமர்ந்து இருக்கும் பெண்கள் தாங்கள் அணிந்து இருக்கும் நகை பாதுகாத்து கொள்ள வேண்டும். முடிந்த வரை இரவு நேரங்களில் ஜன்னல்களை மூடிவிட்டு தூங்க வேண்டும். கேட்பாரற்று கிடக்கும் பொருட்களை பார்த்தால் அதை தொடவோ, எடுக்கவோ வேண்டாம். ரெயில்வே போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும்.