பட்டுக்கோட்டை தங்கவேல் நகரை சேர்ந்த அன்பரசன் (26), இவர் பூக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் அறந்தாங்கி சாலை பகுதியை சேர்ந்த அரவிந்த் (38), என்பவரின் ஆட்டோவை, பூக்கள் ஏற்றிச் செல்ல பயன்படுத்தி வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அன்பரசன் ஆட்டோவிற்கான வாடகையை கொடுக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில், அரவிந்தனுக்கும், அன்பரசனுக்கும் இடையே, பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சனிக்கிழமை மாலை அன்பரசன் மீண்டும் அரவிந்தனிடம் தகராறு செய்து, திட்டி விட்டு சென்றுள்ளார்.
பிறகு, இரவு சுமார் 9:30 மணிக்கு குடிபோதையில் இருந்த அன்பரசன், மார்கெட் பகுதியில் ஆட்டோவுடன் நின்று கொண்டிருந்த அரவிந்தனிடம், தகராறு செய்து அடிக்க முயன்றுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த அரவிந்தன் ஆட்டோவில் இருந்த இரும்பு கம்பியால், அன்பரசன் தலையில் தாக்கினார். இதில், அன்பரசன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து இறந்துபோன அன்பரசனின் அண்ணன் பாலசுப்ரமணியன், அளித்த புகாரின் பேரில், பட்டுக்கோட்டை நகரக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, ஆட்டோ ஓட்டுநர் அரவிந்தனை கைது செய்தனர்.