பாப்பாநாட்டில் சாலையில் நாற்று நட்டு நூதன போராட்டம்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஆவிடநல்ல விஜயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பாப்பாநாடு பிள்ளையார் கோவில் செல்லும் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. அங்கு மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பா. ஜனதா மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் மகேஸ்வரன் உள்ளிட்டோர் நேற்று சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும் சாலையில் நாற்றுக்களை நட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.