தமிழகத்தில் செவிலியர் கலந்தாய்வு கண்துடைப்பாக நடக்கிறது என செவிலியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் செவிலியர் காலிப் பணியிடங்களுக்கான பொது கலந்தாய்வு அந்தந்த சுகாதார மாவட்டங்களில் நடக்கிறது.
இதில் பெரும்பாலான காலிப்பணியிடங்களை கலந்தாய்வுக்கு முன்பாகவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என புகார் தெரிவித்துள்ளனர் சிவகங்கை கலந்தாய்வில் கலந்துகொண்ட செவிலியர்கள் கூறியது: கலந்தாய்வு காலை 11:00 மணிக்கு துவங்கும் என்றார்கள். ஆனால் மதியம் 1:00 மணிக்கு தான் துவங்கியது. நாங்கள் 10 வருடங்களுக்கு மேலாக சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறோம். எங்களது பெயர்கள் கலந்தாய்வு பட்டியலில் இல்லை.
அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களுக்கான காலிப்பணியிடங்கள் எத்தனை, எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு காலிப்பணியிடங்கள் உள்ளன என்பது குறித்தும் முழுமையான விவரங்கள் இல்லை. குறிப்பாக மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட தென்பகுதியில் காலிப்பணியிடங்கள் காண்பிக்கவில்லை. விருதுநகர் மருத்துவக் கல்லூரியில் உள்ள காலிப்பணியிடங்கள் முறைகேடாக நிரப்பப்பட்டுள்ளது. மூத்த செவிலியர்கள் பெரும்பாலானோர் மாவட்டம் விட்டு மாவட்டம் குடும்பத்தை பிரிந்து பணி செய்து வருகிறோம். எனவே இந்த கலந்தாய்வை அரசு நிறுத்த வேண்டும் என்றனர்.