சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவரின் வேட்பு மனுவை அதிகாரிகள் தள்ளுபடி செய்ததாக கூறி விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்புவனம் அருகே பிரமனு£ர் கண்மாய் நீரினை பயன்படுத்துபவர்கள் சங்கத்திற்கான தேர்தல் வரும் டிசம்பர் 1ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வேட்பு மனுதாக்கள் நடந்து வருகிறது. தலைவர், துணைத்தலைவர், ஐந்து உறுப்பினர்களுக்கான தேர்தலில் அழகுராஜா, ராஜேந்திரன் ஆகிய இரு தரப்பினர் போட்டியிடுகின்றனர். இதில் அழகுராஜா தலைமையிலான குழுவில் முருகேசன், மலைராசன், கருப்பையா , முத்திருளன், உள்ளிட்ட 4 பேர் உறுப்பினர்களாக போட்டியிடுகின்றனர். இதில் வேட்பு மனுதாக்கல் முடிந்த பிறகு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த மலைராசன், முத்திருளன் ஆகிய இருவரது மனுக்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அழகுராஜா தரப்பைச் சேர்ந்தவர்கள் திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து நடந்த சமாதானப் பேச்சுவார்த்தையில் வேட்பு மனுவை மீண்டும் பரிசீலனை செய்வதாக தெரிவித்ததையடுத்து விவசாயிகள் கிளம்பி சென்றனர்.