கீழடியில் கூடுதல் குழிகளில் அகழாய்வு பணிகள் தீவிரம்

52பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பத்தாம் கட்ட அகழாய்வில் கூடுதல் குழிகள் தோண்டும் பணி நடந்து வருகிறது. கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு பணிகள் ஜூன் 18ம் தேதி பிரபாகரன், ஜவஹர், கார்த்திக் ஆகியோரது நிலங்களில் 35 சென்ட் பரப்பளவில் தொடங்கியது. முதல் கட்டமாக நான்கு குழிகள் மட்டும் தோண்டப்பட்டு நடந்த பணிகளில் சுடுமண் குழாய், பானைகள், மீன் உருவம் பதித்த பானை ஓடுகள், தா தமிழி எழுத்து கொண்ட பானை ஓடு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டன. வழக்கமாக ஜனவரியில் தொடங்கி செப்டம்பரில் பணிகள் முடிவடைந்து விடும், இந்தாண்டு தாமதமாக பணிகள் தொடங்கப்பட்டதால் பருவ மழைக்கு ஏதுவாக பணிகளை தொடர தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. மேலும் சுடுமண் குழாயின் தொடர்ச்சியை கண்டறியவும் கூடுதலாக நான்கு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. 10ம் கட்ட அகழாய்வில் குறிப்பிடத்தக்க பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதால் கூடுதலாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அகழாய்வு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்த இடம் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ள நிலையில் தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி