சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வில்லியரேந்தல் கிராமத்தில் டிப்டாப்பாக உடையணிந்து வந்த இரு பெண்கள் மின்வாரியத்தில் இருந்து வருவதாக கிராமமக்களிடம் அறிமுகமாகியுள்ளனர். ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று உங்கள் வீட்டு மின் இணைப்பு பெட்டியில் 11 இலக்க எண் கொண்ட ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும், அப்படி ஒட்டினால் மட்டுமே இணையதளம் மூலம் மின்கட்டணம் செலுத்த முடியும். , ஸ்டிக்கருக்கு ஐம்பது ரூபாய் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். இதனை உண்மை என நம்பிய கிராமப்புற பெண்கள் ஐம்பது ரூபாய் கொடுத்து ஸ்டிக்கர்கள் ஒட்டியுள்ளனர். வில்லியரேந்தல், வன்னிகோட்டை, வன்னிகோட்டை காலனி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகளில் தலா ஐம்பது ரூபாய் வசூலித்து பச்சை நிறத்தில் மின் இணைப்பு எண் கொண்ட ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளனர். பணம் தர மறுத்தவர்கள் வீடுகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டவில்லை. ஏற்கனவே மின்வாரியம் சார்பில் நீல நிற ஸ்டிக்கர்கள் இலவசமாக ஒட்டிய நிலையில் தற்போது பச்சை நிறத்தில் ஸ்டிக்கர்கள் பணம் கொடுத்து ஒட்ட வேண்டும் என பெண்கள் வீடு வீடாக வந்த சம்பவத்தையடுத்து ஒருசிலர் மின்வாரிய அதிகாரிகளுக்கு போன் செய்து விசாரித்த போதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. , இதனையடுத்து கிராம இளைஞர்கள் அந்த பெண்களை தேடிய போது மாயமாகி விட்டனர்.