சேலம் சங்ககிரி அருகே கொலை செய்து சூட்கேசில் அடைக்கப்பட்டு இருந்த பெண்ணின் இரு கைகளின் கட்டை விரலில் ஒரு விரல் ஒட்டியபடி மொத்தம் 12 விரல்கள் இருந்தன. டிராவல் பேக்கில் வடமாநிலமான குஜராத் மாநில ஸ்டிக்கர் ஒட்டி இருந்தது. இதனால் இறந்த பெண் வடமாநில பெண்ணாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இதன் அடிப்படையிலும் விசாரித்து வருகின்றனர்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து சங்ககிரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் ஒரு தனிப்படையும், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீராமன், கண்ணன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தனிப்படையினர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.