மேட்டூரில் இருந்து சேலத்திற்கு நேற்று(செப்.4) இரவு அரசு பஸ் ஒன்று வந்தது. இந்த பஸ்சை, மேட்டூர் ராமன் நகர் பகுதியைச் சேர்ந்த பிரபு (வயது 50) என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ்சில், ஜலகண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த பர்கத் அலிகான் (35), கண்டக்டராக பணியில் இருந்தார். இந்த பஸ், சேலம் டால்மியா போர்டு அருகில் வந்தபோது பஸ்சுக்கு முன்பாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் பஸ்சுக்கு வழிவிடாமல் ஓட்டிச்சென்றார். அப்போது பஸ் டிரைவர் பிரபு, ஹாரன் அடித்தார். ஆனாலும் அவர்கள் வழி விடாமலேயே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
இதையடுத்து மாமாங்கம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் பஸ்சை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் பஸ்சுக்குள் ஏறி டிரைவர் பிரபுவை தாக்கினர். இதை தடுக்க முயன்ற கண்டக்டர் பர்கத் அலிகானையும் தாக்கினர். அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டதால் அங்கிருந்து 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டனர். இதில் காயமடைந்த டிரைவர் பிரபு, கண்டக்டர் பர்கத் அலிகான் ஆகியோர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது ஊத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.